நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபரணை – திருகோணமலை வீதியின் கித்துலுத்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், பின்னால் பயணித்த நபரும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அக்போபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, அம்பாறை தர்மபால மாவத்தையில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்முனை நோக்கிச் சென்ற வேன் ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் சிறுமி ஒருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் உடவலவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், களுத்துறை வடக்கு, தியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரணையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றுடன் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்த பெண்ணும் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கல்பாத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரும் 16 வயதுடைய யுவதியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








