பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (04) அறிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் தலைமையிலான இந்த அணியில் பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு வருடங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் தசுன் ஷானக்க மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஒரு வருடத்திற்கும் மேலாக வாய்ப்பு கிடைக்காத ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயமடைந்துள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்கவும் குழாமில் இடம்பெற்றுள்ள போதிலும், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அவரது முழுமையான உடற்தகுதி உறுதி செய்யப்பட்ட பின்னரே தொடரில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிறைவடைந்த இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்த அளவில் சோபிக்கத் தவறிய சரித் அசலங்க இம்முறை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முதலில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடருடன் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிகள் ஒக்டோபர் 09, 11 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஒக்டோபர் 18ஆம் திகதி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியுடன் முக்கோண ஒருநாள் தொடர் ஆரம்பமாகி, ஒக்டோபர் 27ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
முக்கோண ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர், ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.
இலங்கை குழாம்:
பெதும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, கமில் மிஷார, குசல் மெண்டிஸ் (தலைவர்), பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷண, சசிந்து கொழும்பகே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, எஷான் மாலிங்க.








