இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி இரு நாடுகளுக்கும் பயணம் செய்வதற்கு வழிவகுக்கும் விசா விலக்கு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பிரதி பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தின்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரும் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், மக்களுக்கிடையிலான உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விசா விலக்கு ஒப்பந்தத்திற்கு இரு நாடுகளினதும் அமைச்சரவைகள் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.







