முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் ஊடாக முறையான அரசாங்க நடைமுறைகளுக்கு புறம்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த நிறுவனங்களுக்கு பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி உரிமங்களைப் பெற்றுக்கொள்ள உதவியதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று பிற்பகல் 4.55 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.





