2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், 233 சிறுமிகள் உட்பட 11,131 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அத தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு அருகில் போதைப்பொருள் விநியோகிக்கப்படுவது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ஐஸ்கிறீம், பஞ்சுமிட்டாய் மற்றும் சரவிட்டா போன்ற உணவுப் பொருட்களில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகக் கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், நடத்தை, உரையாடல்கள் மற்றும் நண்பர்கள் வட்டம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான மாற்றங்கள் பிள்ளைகள் போதைப்பொருள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்







