இலங்கையில் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தினால், ஒட்டோ டீசலின் சந்தை விலைக்கும் செலவு மீட்பு சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசம் குறைந்துள்ளதுடன், பெற்றோல் 92 இற்கான விலை வித்தியாசம் அதிகரித்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது.
சுயாதீன ஆய்வு நிறுவனமான வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பொது நிதித் தகவல் தளத்தின் தகவலின்படி, அண்மைய விலை அதிகரிப்புக்குப் பின்னரும் பெற்றோல் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகிய இரண்டும் அவற்றின் செலவு மீட்பு சூத்திர விலையை விடக் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி, நவம்பர் முதலாம் திகதியன்று பெற்றோல் 92 ஒரு லீற்றரின் சந்தை விலை 424 ரூபாவாகக் காணப்பட்டதுடன், அதன் செலவு மீட்பு சூத்திர விலை 481 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றருக்கு 57 ரூபாய் வித்தியாசம் காணப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் பெற்றோல் 92 ஒரு லீற்றரின் சந்தை விலை 414 ரூபாவாகவும், சூத்திர விலை 465 ரூபாவாகவும் காணப்பட்டது. இதன்போது இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் 51 ரூபாவாக இருந்தது.
இதன்படி, நவம்பர் மாதத்தில் பெற்றோலின் சில்லறை விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும், சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசம் மேலும் 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஒட்டோ டீசலின் சந்தை விலை ஒக்டோபர் மாதத்தில் ஒரு லீற்றருக்கு 392 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் 397 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எனினும், ஒட்டோ டீசலுக்கான செலவு மீட்பு சூத்திர விலை 467 ரூபாவிலிருந்து 459 ரூபாவாகக் குறைந்துள்ளது. இதனால், சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசம் 75 ரூபாவிலிருந்து 62 ரூபாவாகக் குறைந்துள்ளது.
நவம்பர் மாத விலைத் திருத்தத்தின் மூலம் டீசலுக்கான விலை இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், பெற்றோல் விலை அதிகரிப்பு சந்தை விலைக்கும் சூத்திர விலைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதற்குப் போதுமானதாக அமையவில்லை என PublicFinance.lk சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நவம்பர் மாதத்திற்கான செலவு மீட்பு சூத்திரத்தில், பொருந்தக்கூடிய மானியங்களைக் கணக்கிட்ட பின்னர், பெற்றோல் 92 ஒரு லீற்றருக்கு 150 ரூபாவும், ஒட்டோ டீசல் ஒரு லீற்றருக்கு 67 ரூபாவும் நிகர வரியாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறையிலுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையிலான எரிபொருள் விலை நிர்ணய சூத்திரம் மற்றும் சிங்கப்பூர் சந்தையின் குறியீட்டு விலைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சூத்திர விலைகள் கணக்கிடப்படுகின்றன.
இந்த ஆய்வுக்காக இலங்கை மத்திய வங்கி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO), சூத்திர விலைக் கணக்கீடுகள் மற்றும் நிதி அமைச்சிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.









