59.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனமொன்றின் 30 வயதுடைய ஊழியர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்தின் கணினித் தரவுத்தளத்தில் போலியான தகவல்களைப் பதிவு செய்து, வங்கிக் கணக்குகள் ஊடாக 59,656,496.84 ரூபாவை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நம்பிக்கை மோசடி மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு (4) இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, கட்டுநாயக்க பிரிவின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் (30) வெள்ளிக்கிழமை காலை குறித்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிதி மோசடி தொடர்பான ஏனைய விபரங்களைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.








