கட்டான மற்றும் கிரிஉல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இருவேறு சோதனை நடவடிக்கைகளில், 21 கிலோ 750 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டான மற்றும் கிரிஉல்ல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், 21 கிலோ 750 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பில் முன்னதாகக் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, தலங்கம, கலல்கொட சந்தி பகுதியில் மோட்டார் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை நுகேகொடை பிராந்திய நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த மோட்டார் வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதிலிருந்து ஒரு கிலோ 10 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடை பிராந்திய நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








