நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் தொடர்பில், சுமார் 200 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 20 முதல் 24 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சந்தை விசாரணைகளின்போதே இந்தச் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் விலைகளை நுகர்வோர் தெளிவாக அறிந்துகொள்வதை உறுதிப்படுத்துதல், சந்தையில் விலை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளைத் தடுப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரிசி, சீனி, பருப்பு, மரக்கறிகள், பழங்கள், கோதுமை மா, பேக்கரி உற்பத்திகள், சிற்றுண்டிகள், ஆடைகள், மின்சார உபகரணங்கள், கையடக்கத் தொலைபேசி உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா உள்ளிட்ட பல மாவட்டங்களில் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக, அரிசி, சீனி, பருப்பு, மரக்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறிய பல வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில வழக்குகளை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்வதற்கான திகதிகளும் குறிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அலுவலகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
இதேவேளை, கோதுமை மா விற்பனை, சந்தையில் காணப்படும் கையிருப்புகள், விலைக் காட்சிப்படுத்தல் மற்றும் தொடர்புடைய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 26(1) ஆம் பிரிவின்படி, பொருட்களிலோ அவற்றின் பொதிகளிலோ சட்டத்திற்கு அமைவாக விலை குறிப்பிடப்படாத சந்தர்ப்பங்களில், அவற்றின் விலைகளை நுகர்வோர் தெளிவாகக் காணக்கூடிய வகையில் வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்துவது வர்த்தகர்களின் சட்டபூர்வக் கடமையாகும்.
எனவே, விலைகளைக் காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு அனைத்து வர்த்தகர்களையும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படாமை அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் இருப்பின், அவற்றைத் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.







