2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பசிக் குறியீட்டில் (Global Hunger Index – GHI), தரவுகள் கிடைக்கப்பெற்ற தெற்காசிய நாடுகளில் இலங்கை மிகக் குறைந்த பசிக் குறியீட்டைப் பதிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் நாட்டின் பசி நிலைமையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இது வெளிப்படுத்துகிறது.
ஒக்டோபர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை 10.2 புள்ளிகளைப் பெற்று, உலகளவில் மதிப்பிடப்பட்ட 122 நாடுகளில் 53 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் நேபாளம் 14.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் 19.2 புள்ளிகளுடனும், இந்தியா 24.1 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 25.5 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 28.6 புள்ளிகளுடனும் பதிவாகியுள்ளன.
போதிய தரவுகள் இல்லாத காரணத்தினால் பூட்டான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இந்த அறிக்கையில் புள்ளிகள் வழங்கப்படவில்லை.
இலங்கையின் பசிக் குறியீட்டுப் புள்ளி 2000 ஆம் ஆண்டில் 22.1 ஆகக் காணப்பட்டதுடன், 2006 ஆம் ஆண்டில் 19.9 ஆகவும், 2012 ஆம் ஆண்டில் 20.8 ஆகவும், 2018 ஆம் ஆண்டில் 11.4 ஆகவும் குறைந்து, 2026 ஆம் ஆண்டில் 10.2 ஆகப் பதிவாகியுள்ளது.
எனினும், இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், இலங்கை தொடர்ந்தும் மிதமான பசி நிலை வகைப்பாட்டிலேயே காணப்படுகிறது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான சவால்கள் நாட்டில் இன்னும் நீடிப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 4.9 சதவீதமானோர் போதிய ஊட்டச்சத்தின்றி உள்ளதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 10.1 சதவீதமானோர் வயதுக்கேற்ற வளர்ச்சியின்மையாலும், 9.3 சதவீதமானோர் உயரத்திற்கேற்ற எடை குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் இறப்பு விகிதம் 0.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
உலகளாவிய பசிக் குறியீடானது, போதிய ஊட்டச்சத்தின்மை, சிறுவர்களின் வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, உயரத்திற்கேற்ற எடை குறைபாடு மற்றும் சிறுவர் இறப்பு ஆகிய நான்கு பிரதான குறிகாட்டிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. குறைந்த புள்ளிகள் குறைந்த பசி நிலைமையைக் குறிக்கின்றன.
இதேவேளை, சுமார் இரண்டு தசாப்தங்களாகக் காணப்பட்ட முன்னேற்றத்திற்குப் பின்னர், உலகளவில் பசி நிலைமை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக 2026 ஆம் ஆண்டுக்கான அறிக்கை எச்சரித்துள்ளது.
மோதல்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியன இந்த நிலைமைக்கான முக்கிய காரணிகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.








