சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா பகுதிகளைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு முஸ்லிம் உலக லீக் (Muslim World League – MWL) கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சவூதி அரேபியாவுக்கு முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ள அந்த அமைப்பு, இஸ்லாமிய புனிதத் தலங்களின் புனிதத்தன்மையை மீறும் பாரதூரமான செயலாக இவற்றை வர்ணித்துள்ளது.
சவூதி செய்தி முகவரகமான SPA வெளியிட்டுள்ள தகவலின்படி, முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் கலாநிதி முஹம்மத் பின் அப்துல் கரீம் அல்-ஈஸா (Sheikh Dr. Mohammed bin Abdulkarim Al-Issa), இத்தாக்குதல்களைக் கண்டித்துள்ளதுடன், சவூதி அரேபியாவின் நிலப்பரப்பு, பொதுமக்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கான அந்நாட்டின் நடவடிக்கைகளுக்கு அமைப்பின் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி ஊடகங்களின் தகவல்களின்படி, மக்கா, ஜித்தா, தாயிப் மற்றும் ராபிக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகளின் சிதைவுகள் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்கு தனது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ள முஸ்லிம் உலக லீக், அந்நாட்டின் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேற்கு சவூதி அரேபியாவை இலக்காகக் கொண்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களின் புனித நகரங்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்துள்ளன.








