ஹபராதுவ, கொக்கலை பகுதியில் ரயில் கடவையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (ஒக்டோபர் 25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 14 மற்றும் 15 வயதுக்கு இடைப்பட்ட காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய மற்றும் உனவட்டுன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்னர், கொட்டாவைக்குத் திரும்பிக்கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்றபோது, குறித்த பேருந்தில் சுமார் 41 சிறுவர்கள், மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் 14 பேர் மற்றும் பெற்றோர்கள் ஆறு பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பேருந்தின் 40 வயதுடைய சாரதியும் 21 வயதுடைய நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







