குவைத்தின் இரு வெவ்வேறு பகுதிகளில் இலங்கைப் பெண்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அலி சபா அல்-சேலம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இரு சம்பவங்களும் தொடர்பில் பொலிஸார் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முதலாவது சம்பவத்தில், அலி சபா அல்-சேலம் பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள களஞ்சிய அறையிலிருந்து 1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அஹ்மதி பொது குற்றவியல் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டாவது சம்பவத்தில், அல்-நஹ்தா பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 1999ஆம் ஆண்டு பிறந்த மற்றொரு இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஜஹ்ரா பொது குற்றவியல் பிரிவினர், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து சான்றுகளைச் சேகரித்துள்ளனர்.
குவைத்தின் ‘அரப் டைம்ஸ்’ நாளிதழின் செய்தியின்படி, இரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் இடம்பெற்றுள்ளதால், சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகத் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த இரு உயிரிழப்புகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா அல்லது சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பது குறித்து குவைத் அதிகாரிகள் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








