சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் (King Khalid International Airport) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (25) முதல் விமானப் பயணங்களுக்காக இரண்டு முனையங்கள் ஒதுக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துச் சில மணிநேரங்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து இராணுவ இலக்காகக் கருதப்படும் என ஹூதி படையினரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, கிங் காலித் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் நேற்று (24) வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் முனையம் 1 உள்நாட்டு விமானப் பயணங்களுக்கும், முனையம் 2 தேசிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் சர்வதேச விமானப் பயணங்களுக்கும் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தொடர்ந்து, ஒக்டோபர் 10ஆம் திகதி விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல், கடந்த தசாப்தத்துக்கும் மேலான காலப்பகுதியில் சவூதி அரேபியா மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் தாக்குதல்களை நடத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல்கள், பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போர்ச் சூழலில் அமெரிக்காவின் நட்பு நாடான சவூதி அரேபியா மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா அண்மைக்காலமாகத் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் செங்கடல் கரையோரத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்ததுடன், யேமன் அரசின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.








