போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 5 இலட்சத்து 74 ஆயிரம் பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நிகவெரட்டியவில் இன்று (11) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, குற்றவாளிகளின் சட்டவிரோத உடைமையிலிருந்த 3,980 துப்பாக்கிகள் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் சீர்குலைந்திருந்த சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டி, மக்களின் பணத்தை வீணடித்த கடத்தல்காரர்களுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குற்றங்கள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனிமேல் எந்தவொரு மோசடிக்காரருக்கும் அல்லது கடத்தல்காரருக்கும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
இதற்காக விசாரணை அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டின் நீதித்துறை அமைப்பில் தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நீதித்துறைச் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வழக்கு விசாரணைகளுக்கான காலத்தைக் குறைத்து மக்களுக்கு விரைவான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும் நேரத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.








