விவாகரத்து வழக்கில் தீர்ப்பை விரைவாக வழங்குவதற்காக 65,000 ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், கொழும்பு வடக்கு காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத தெரண செய்திச் சேவையின் தகவலின் படி, குறித்த நீதிபதியின் மனைவி அதே காதி நீதிமன்றத்தில் செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
விவாகரத்து வழக்கொன்றில் தாமதமின்றித் தீர்ப்பு வழங்குவதற்காகவே சந்தேகநபர்கள் குறித்த பணத்தைக் கோரியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நீதிபதியும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.








