மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களாக பலத்த மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








