இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் தொழில்சார் பெருமிதம் 2025ஆம் ஆண்டில் 55 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டில் 77 சதவீதமாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
‘இலங்கையில் ஊடகவியல்துறையின் நிலை 2026’ (State of Journalism in Sri Lanka 2026) என்ற ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mark and Comm நிறுவனம், வருடாந்தம் முன்னெடுக்கும் ‘Sri Lanka Media’s Voice’ ஆய்வின் இரண்டாவது கட்டத்தின் அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
குறித்த ஆய்வறிக்கை நேற்று (18) வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில், வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
ஆய்வு முடிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், ஊடகவியலாளர்களின் தொழில்சார் பெருமிதம் அதிகரித்துள்ளமையை வரவேற்றதுடன், இது ஊக்கமளிக்கும் முன்னேற்றம் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, நியாயமான மற்றும் உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம், பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துதல், குறிப்பாக பெண் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் சுயாதீனமான சுயஒழுங்குமுறைப் பொறிமுறையை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கிய சவால்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், தகவல் சரிபார்ப்பு நடைமுறைகளின் தரத்தை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையில் முறையான பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான ஆய்வுகள் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் ஊடகத்துறைக்குத் தேவையான ஆதரவுகளைப் புரிந்துகொள்வதற்கும் அவசியமானவை என பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் வலுவான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் கௌரவமான ஊடகக் கலாசாரத்தை உருவாக்குவதற்கான கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்ள இந்த ஆய்வு முடிவுகள் பயனுள்ள வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








