இலங்கையில் மருத்துவர்களாகத் தகுதி பெறாத சுமார் 40,000 பேர் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி (Antibiotic Resistance) அதிகரிப்பதற்கும் வழிவகுப்பதாக அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவரும் ஆலோசனை சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் ருவன் பெர்னாண்டோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத் தன்மை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், முறையற்ற வகையிலும் பயன்படுத்துவதே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் தாங்களாகவே வீடுகளில் மருந்துகளைப் பயன்படுத்துதல், மருத்துவர்களிடம் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைக் கோருதல் மற்றும் நோயாளர்கள் விரைவில் குணமடைவார்கள் என்ற எண்ணத்தில் மருத்துவர்கள் தேவையற்ற வகையில் இம்மருந்துகளைப் பரிந்துரைத்தல் உள்ளிட்ட காரணிகள் இதற்குப் பங்களிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மருத்துவர்களாகத் தகுதி பெறாத சுமார் 40,000 பேர் நாடளாவிய ரீதியில் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நபர்களால் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளும் வழங்கப்படுவதாகவும், இது நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும் பிரச்சினைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் சிலர் எவ்விதமான முறையான மருத்துவத் தகைமைகளையும் கொண்டிருக்காத நிலையில், மருந்தகங்களில் பணியாற்றிய அனுபவத்தின் மூலம் மருந்துகள் தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றுக்கொண்டு, பின்னர் மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
உரிய மருத்துவத் தகைமைகள் இல்லாத நபர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பரிந்துரைப்பது மிகவும் பாரதூரமான பிரச்சினை எனச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வும் கலந்துரையாடலும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தவறினால், எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கூட செயல்திறனை இழக்கும் அபாயம் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.








