2021ஆம் ஆண்டு இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய MV X-Press Pearl கப்பல் தொடர்பான நட்டஈடு கோரிக்கை நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக, இலங்கை அதிகாரிகளுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லை என சுயாதீன விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது.
கப்பலின் பொறுப்புக் காப்புறுதி நிறுவனமான London P&I சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையை மேற்கொண்ட வணிகத் தகவல் மற்றும் புலனாய்வு நிறுவனமான Sigma7 Business Intelligence, தனது விசாரணை அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
‘250 மில்லியன் அமெரிக்க டொலர் X-Press Pearl இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை’ (An Investigation into the US$250 Million X-Press Pearl Bribery Allegation) என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
2021 மே மாதம் MV X-Press Pearl என்ற கொள்கலன் கப்பல் தீப்பற்றியதைத் தொடர்ந்து, ஜூன் 2ஆம் திகதி இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் மூழ்கியது.
இதனால் ‘நர்டில்ஸ்’ (Nurdles) எனப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உள்ளிட்ட பெருமளவிலான கழிவுகள் கடலில் கலந்தன. இதனைத் தொடர்ந்து கடல் மாசுபாட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பின்னர் மூழ்கிய கப்பலின் சிதைவுகளும் அகற்றப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பில் பல்வேறு நாடுகளில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கப்பலின் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் உள்ளூர் முகவர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன், இலங்கை அரசாங்கம் சிங்கப்பூரில் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ததுடன், பொறுப்புடைமையை மட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் இங்கிலாந்தின் கடல்சார் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டன.
இலஞ்சக் குற்றச்சாட்டு
2023 ஏப்ரல் மாதம் அப்போதைய நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, X-Press Pearl கப்பல் விபத்து தொடர்பான நட்டஈடு நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு பின்னர் நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும், இலங்கை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போதும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டது.
எனினும், குறித்த இலஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படும் நபர் மற்றும் பணம் சென்றடைந்த இடம் தொடர்பில் வெவ்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
Sigma7 விசாரணையின் கண்டுபிடிப்புகள்
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உரைகள், பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய நீதிமன்ற ஆவணங்கள், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி ஊடகச் செய்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடன் தகவல்கள், நிறுவன உரிமை, பணிப்பாளர் பதவிகள் மற்றும் சொத்து விவரங்கள் அடங்கிய பிரத்யேக தரவுத்தளங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, குற்றச்சாட்டின் ஆரம்பம் முதல் அது அரசியல் அறிக்கைகள் மற்றும் ஊடகச் செய்திகள் ஊடாகப் பரவிய விதம் வரையிலான தகவல்கள் ஆராயப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு அடையாளம் தெரியாத வாட்ஸ்அப் செய்தியொன்றிலிருந்து உருவானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அந்தச் செய்தியின் மூலத்தகவல், அதனை அனுப்பியவர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் ஆகியவை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
மேலும், குறித்த 250 மில்லியன் அமெரிக்க டொலர் பிரித்தானியாவின் NatWest வங்கிக் கணக்கொன்றுக்கு அனுப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதன் கணக்கு விவரங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனினும், குறித்த வங்கிக் கணக்கு விவரங்களில் முரண்பாடுகள் காணப்பட்டதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு மீளுருவாக்கம் செய்யப்பட்ட கணக்குகளுக்கு சிறிய தொகைகளைச் செலுத்துவதற்கு Sigma7 நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
அதேவேளை, பிரித்தானியாவின் பணமோசடி தடுப்பு விதிமுறைகளின்படி, 250 மில்லியன் அமெரிக்க டொலர் போன்ற பாரிய நிதிப் பரிமாற்றமொன்று கடுமையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, நிதியின் மூலாதாரம், பரிவர்த்தனையின் நோக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்பினர் தொடர்பில் வங்கிகள் விரிவான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பிலும் அறிக்கையிட வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த இலஞ்சப் பணம் பிரித்தானியாவின் NatWest வங்கிக் கணக்கிலிருந்து பஹாமாஸில் உள்ள அடையாளம் தெரியாத மற்றுமொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டின் சில வடிவங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை உறுதிப்படுத்தக்கூடிய வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இலஞ்சத்தைப் பெற்றதாக அல்லது இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்பட்ட நபரின் அடையாளம் தொடர்பிலும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆரம்பத்தில் வேறு பெயர்கள் குறிப்பிடப்பட்ட நிலையில், பின்னர் சாமர குணசேகர மற்றும் மஞ்சுசிறி நிஸ்ஸங்க ஆகியோரின் பெயர்கள் இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டன.
எனினும், மஞ்சுசிறி நிஸ்ஸங்க குறித்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்ததைத் தொடர்ந்து, Lanka eNews இணையத்தளம் தனது செய்தியைத் திரும்பப் பெற்று மன்னிப்பும் கோரியிருந்தது.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுத் தகவலை முதலில் வாட்ஸ்அப் ஊடாகப் பெற்று முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அனுப்பியதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும, அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைத் தம்மால் கண்டறிய முடியாததால் அந்தத் தகவலைத் தாம் நம்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவரின் கருத்து
இதேவேளை, Sigma7 நிறுவனத்தின் விசாரணை மற்றும் அதன் கண்டுபிடிப்புகளுக்கான வழிமுறைகளை ஆய்வு செய்த லண்டன் பெருநகர காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் றிச்சர்ட் வொல்டன், அறிக்கையின் முக்கிய முடிவுகளுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
MV X-Press Pearl கப்பல் மூழ்கியதால் ஏற்பட்ட நட்டஈடு தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்காக London P&I அல்லது கப்பலின் உரிமையாளர்களான X-Press Feeders நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு நம்பகமான எந்தவொரு ஆதாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தக் குற்றச்சாட்டில் தவறான வங்கிக் கணக்கு விவரங்கள், இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நபர் தொடர்பான முரண்பட்ட தகவல்கள் மற்றும் பணம் சென்றடைந்ததாகக் கூறப்படும் இடம் தொடர்பான தெளிவற்ற தகவல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உளவுத் தகவல், குற்றச்சாட்டு மற்றும் நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகியவற்றுக்கு இடையில் முக்கியமான வேறுபாடு காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அடையாளம் தெரியாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவலொன்று மேலதிக விசாரணைக்கு வழிவகுக்கலாமே தவிர, அதனை ஒரு குற்றம் இடம்பெற்றதற்கான ஆதாரமாகக் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்திலோ, ஊடகங்களிலோ அல்லது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளிலோ ஒரு குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுவதால் அதற்கு மேலதிக நம்பகத்தன்மை கிடைத்துவிடாது என்றும் றிச்சர்ட் வொல்டன் தெரிவித்துள்ளார்.








