சிறைத்தண்டனை பெறும் பௌத்த பிக்குகளைச் சிறைச்சாலைகளிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இனிவரும் காலங்களில் பௌத்த பிக்குகளை அவரவர் சார்ந்த பீடம் அல்லது பிரிவின் பரிந்துரைக்கு அமைய காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலபொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிறைத்தண்டனை பெறும் பௌத்த பிக்குகளைச் சிறைச்சாலைகளிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லும்போது தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து மகாநாயக்க தேரர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பௌத்த சாசனம் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பில் முப்பீடங்களின் மகா சங்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்களுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, தற்போதைய சிறைச்சாலை நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் 1877ஆம் ஆண்டின் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்திலும் அதன் விதிகளிலும் பௌத்த பிக்குகளுக்கெனத் தனியான விசேட ஏற்பாடுகள் எதுவும் இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள சட்டக் கட்டமைப்புக்கு அமையவே அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும், நடைமுறையிலுள்ள சட்டத்தை மீறித் தனிநபர்களுக்காக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தாம் தயாரில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனவே, தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் சட்டத்தைத் திருத்தியமைப்பதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மகா சங்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுநாயக்க தேரர்களும் பதிவாளர் தேரர்களும், பௌத்த பிக்கு ஒருவர் இவ்வாறானதொரு நிலைமைக்கு முகங்கொடுப்பது முழு மகா சங்கத்தினருக்கும் சமூகத்திற்கும் மிகவும் உணர்வுபூர்வமான விடயமாகும் எனச் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய, நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் பிக்குகள் தொடர்பில், அவர்கள் சார்ந்த பீடம் அல்லது பிரிவுக்கு அறிவிப்பதுடன், அந்தப் பீடம் அல்லது பிரிவின் கருத்துக்கு அமைய அவர்களைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியில் அழைத்துச் செல்வதற்கான பொருத்தமான விதிகளை உருவாக்க வேண்டும் என மகா சங்கத்தினர் முன்மொழிந்தனர்.
இதன் மூலம் குறித்த சலுகையை எவரும் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளைப் புதுப்பிப்பதற்காக கடந்த 08ஆம் திகதி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில், நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த ஆரியரத்ன, பௌத்த விவகாரங்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனாரத்ன மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விசேட குழுவின் முதலாவது கூட்டம் கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. குழுவின் தலைவர் பிரின்ஸ் சேனாதீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தேவையான கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இக்குழு இரண்டு வாரங்களுக்குள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய விதிகள் மற்றும் நிலையான உத்தரவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவுள்ளது.
அத்துடன், திருத்தங்கள் தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, அவை எதிர்வரும் வாரத்தின் நடுப்பகுதியில் மகா சங்கத்தினரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய பௌத்த பிக்குகளை அவரவர் சார்ந்த பீடம் அல்லது பிரிவின் பரிந்துரையின் அடிப்படையில் காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.








