அஷ்ரப் ஏ. சமத்
பாணந்துறை ஹொரேதுடுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முன்னாள் அதிபர்களின் பெயர்களில் இரண்டு வகுப்பறைக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன், தொழிற்பயிற்சிகளைப் பூர்த்தி செய்த 40க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களுக்கு தேசிய தொழிற்தகைமை (NVQ) சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் எஸ்.எச். முத்தலிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், களுத்துறை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் சிவகௌரி உமாபதி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஏ.ஐ.எம். சுஹைர் மற்றும் ஏ. பகீர் மொஹமட் ஆகியோரின் பெயர்களில் வகுப்பறைக் கட்டிடங்கள் பெயரிடப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
மேலும், களுத்துறை மற்றும் இரத்மலானை தொழில்நுட்பக் கல்லூரிகளின் போதனாசிரியர்களின் பங்களிப்புடன், பாடசாலையை விட்டு விலகிய 40க்கும் மேற்பட்ட பழைய மாணவர்களுக்குப் பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கணினித் துறை, ஹோட்டல் துறை, மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல், முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி மற்றும் உளவளத்துணை உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பயிற்சி நெறிகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ், தரம் 12இல் இணையும் மாணவர்களுக்கும் இரண்டு கட்டங்களாகத் தொழில்நுட்பம், தொடர்பாடல், குடியியல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு, தேசிய தொழிற்தகைமை (NVQ) சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










