பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன சான்றொப்பமிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலம் நேற்று (22) முதல் சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டமூலம் முதன்முறையாக வாசிப்புக்காக 2026 ஓகஸ்ட் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி நடைபெற்றதுடன், பின்னர் வாக்கெடுப்பின்றி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தை நீக்குவதற்காகவே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆயுதப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி சட்டம் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, குறித்த பதவியும் முடிவுக்கு வருகிறது.
புதிய சட்டம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அலுவலகத்துக்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படவுள்ளன.
இதன்படி, இந்தச் சட்டம் 2026ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது.








