எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக் காணப்படுவதால் அதன் விலை குறைவடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் கோழி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான உற்பத்தி காணப்படுவதாகவும், சந்தையின் தேவைக்கேற்ப எந்தவொரு அளவிலான கோழி இறைச்சியையும் விநியோகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அதனை ஈடுசெய்வதற்குப் போதுமான அளவு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள அதேவேளை, உற்பத்தி குறைவடைந்தமையே விலை உயர்வுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கோழிப்பண்ணைகளை அண்டிய பகுதிகளில் பல்வேறு வைரஸ் நோய்கள் பரவியமையும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நவம்பர் மாதத்தில் நிலவும் மழைக்காலம் மற்றும் வெப்பநிலை மாற்றங்களும் முட்டை உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ஒரு முட்டை 39 முதல் 40 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் முட்டையின் விலை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் நிரம்பலைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியைப் பாரியளவில் அதிகரிப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வொன்றை வழங்குவார் என எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.








