அப்ரா அன்சார்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்த விமர்சனங்களுக்கு அல்ஜசீரா மீடியா நெட்வொர்க் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில், நெதன்யாகுவின் கருத்துகளை அல்ஜசீரா “திட்டவட்டமாக நிராகரிப்பதாக” தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை (24) உரையாற்றிய நெதன்யாகு, அல்ஜசீராவை உலகின் “நச்சுத்தன்மை கொண்ட ஊடக நிறுவனங்களில்” ஒன்றாகக் குறிப்பிட்டதுடன், இஸ்ரேலை வெறுக்குமாறு இளைஞர்களின் மனதை “மூளைச்சலவை” செய்வதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அல்ஜசீரா, தரை மட்டத்தில் இடம்பெறும் சம்பவங்களைப் பதிவு செய்தல், உண்மைகளை அறிக்கையிடுதல், பின்னணித் தகவல்களை வழங்குதல் மற்றும் பல்வேறு தரப்பினரின் குரல்களை வெளிப்படுத்துதல் ஆகியவற்றைத் தடுப்பதே இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா. மேடையிலிருந்து இவ்வாறான கருத்துகள் வெளியிடப்படுவது கவலையளிப்பதாகவும், களத்தில் பணியாற்றும் அல்ஜசீரா ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
காஸாவில் இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளின்போது 270-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 12 பேர் அல்ஜசீராவுக்காக பணியாற்றியவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்ஜசீரா மேலும், அதன் ஊடகவியலாளர்கள் மற்றும் கேமரா பணியாளர்கள் சிலர் தங்களது பணியை மேற்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாகவும், சிலர் இலக்கு வைக்கப்படுவதற்கு முன்னர் தூண்டுதல் மற்றும் அவதூறு பிரசாரங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசாங்கம் கடந்த காலங்களில் அல்ஜசீராவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்ரேலில் அல்ஜசீராவின் அலுவலகங்களை மூடவும், அதன் ஒளிபரப்புகளைத் தடை செய்யவும் அந்நாட்டு அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
“இந்த நடவடிக்கைகள் அல்ஜசீராவை மட்டும் இலக்காகக் கொண்டவை அல்ல; உண்மையான தகவல்களையும் சுயாதீன ஊடக செய்திகளையும் அணுகும் ஒவ்வொருவரின் உரிமையையும் அவை பாதிக்கின்றன” என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
ஊடகங்களின் பணி உண்மைகளையும் அவற்றுக்கான பின்னணியையும் உலகிற்கு வழங்குவதாகும். அதேவேளை, தகவல்களின் மூலங்களை மதிப்பீடு செய்து தமது சொந்த கருத்துகளை உருவாக்கும் உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் அல்ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
(Al Jazeera)








