முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69ஆவது வயதில் நேற்று (14) இரவு காலமானார்.
நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு 11.35 மணியளவில் தனது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில ஆண்டுகளாக சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கத்திற்கு, சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய அவருக்கு, சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சியின் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினராகப் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்று மக்கள் பணியாற்றி வந்தார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்டு, தனது குரலைப் பதிவு செய்து வந்தார்.
அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரத்திலும், அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







