வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என்பதால், இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆசிய பசுபிக் அனர்த்த முகாமைத்துவக் கூட்டமைப்பின் இலங்கைக்கான பிரிவு (A-PAD SL) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அண்மைய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இன்று (13) வெளியிடப்பட்ட வானிலை எச்சரிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கப் பிரதேசம், எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நவம்பர் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடாவில் இது மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளிலிருந்து இலங்கையில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாழமுக்கம் இலங்கையின் கிழக்குக் கரையோரமாக வடக்கு நோக்கி நகர்ந்தால் நாட்டில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என A-PAD SL சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், குறித்த வானிலைத் தொகுதியின் நகர்வு மற்றும் தீவிரம் தொடர்பில் இதுவரை உறுதியான கணிப்பை வெளியிட முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்ணில் ஏற்கனவே அதிக ஈரப்பதம் காணப்படுவதால், திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சுமார் 17 பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை எட்டியிருந்ததுடன், நவம்பர் 12ஆம் திகதி முதல் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் விடுக்கப்பட்டிருந்தன.
குறுகிய நேரத்தில் பெய்யும் தீவிர மழை காரணமாக முன்கூட்டிய எச்சரிக்கையின்றி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக தாழ்நில நகர்ப்புறப் பகுதிகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களை அண்மித்த பகுதிகள், நீர்த்தேக்கங்களின் வான்பாயும் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்களில் அதிக அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளுக்கு அப்பாலான கடற்பிரதேசங்களிலும் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வடிகால் கட்டமைப்புகளைச் சுத்தப்படுத்துதல், வாகனங்கள் மற்றும் பெறுமதியான உபகரணங்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு மாற்றுதல், வெள்ளநீர் பாயும் பகுதிகளூடாகப் பயணிப்பதைத் தவிர்த்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் A-PAD SL அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிப்பதுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்படும் வெளியேற்ற உத்தரவுகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வானிலைத் தொகுதியின் நகர்வு மற்றும் தீவிரம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும் நிலையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







