மெல்பேர்னுக்கான தனது விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் 15ஆம் திகதி முதல் வாரத்திற்கு மேலும் மூன்று விமானப் பயணங்களால் அதிகரிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கான தனது மொத்த வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்கவுள்ளதாக தேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேலதிக மெல்பேர்ன் விமான சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, UL608 விமானம் கொழும்பிலிருந்து பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக UL609 விமானம் மெல்பேர்னிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு நண்பகல் 12.10 மணிக்கு கொழும்பை வந்தடையும்.ஏற்கனவே நடைமுறையிலுள்ள தினசரி மெல்பேர்ன் விமான சேவையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
இதன்படி, UL604 விமானம் கொழும்பிலிருந்து அதிகாலை 12.35 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும்.அதேவேளை, UL605 விமானம் மெல்பேர்னிலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
அவுஸ்திரேலியா, இலங்கைக்கான வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் புலம்பெயர் சமூகத்தினரின் பயணங்கள் அதிகரித்து வருகின்றமையே இதற்குக் காரணமாகும்.
மேலதிக விமான சேவைகள் மூலம் கொழும்பு ஊடாக லண்டன், சென்னை, டெல்லி மற்றும் மாலைதீவு உள்ளிட்ட நகரங்களுக்குப் பயணிக்கும் பயணிகளுக்கு குறுகிய இடைநிறுத்தப் பயண வசதிகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், கூட்டணி விமான சேவை நிறுவனங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஏனைய நகரங்களுக்கான இணைப்புப் பயண வசதிகளும் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகரிக்கப்பட்ட விமான சேவைகள் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கும் பயனளிக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.குறிப்பாக, மெல்பேர்னிலிருந்து கொழும்பு ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் விரைவான இணைப்புகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கு வாராந்தம் 14 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.இதில் மெல்பேர்னுக்கு 10 விமான சேவைகளும் சிட்னிக்கு 4 விமான சேவைகளும் உள்ளடங்குகின்றன.








