அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான போராட்டத்துக்குத் தீர்வளிக்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான தீர்வுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கல்விகற்ற இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின்படி இளைஞர் வேலையின்மை வீதம் 43 சதவீதமாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக வங்கியின் புள்ளிவிபரங்களின்படி வறுமை நிலை 60 சதவீதத்தைக் கடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினர் வறுமையிலிருந்து மீள்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தத் தவறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சுமார் 40 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 52 சதவீத பங்களிப்பை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) போதிய ஆதரவு வழங்கப்படாமை குறித்தும் அவர் விமர்சித்தார்.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள வட்டியில்லாக் கடன் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார். தற்போதைய வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நிதியைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஏற்கனவே கடன் பெறும் வசதிகளைக் கொண்டவர்களே அதிகளவில் பயனடைவார்கள் என்றும், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்முனைவோருக்கு உரிய நிவாரணம் கிடைக்காது என்றும் அவர் வாதிட்டார்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர், முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களின் கீழும் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய அவர், புதிய தொழில்களை ஆரம்பிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான ஆரம்ப மூலதனம் மற்றும் செயற்பாட்டு மூலதனத்தை வழங்குவதற்கான போதிய வழிமுறைகள் முன்மொழியப்படவில்லை என்றார்.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதையும் பணவீக்கம் அதிகரிப்பதையும் வெளிப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாத நிலை மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகப் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் இதேபோன்ற சூழல் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
ஜனாதிபதி நிகழ்த்திய சுமார் ஐந்து மணித்தியால வரவு செலவுத் திட்ட உரையை, மனிதாபிமானமற்றதும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் அற்றதுமான ‘கிளிப்பிள்ளை போன்ற உரை’ என சஜித் பிரேமதாச விமர்சித்தார்.
குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்டுள்ள தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தேவையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.








