மன்னர் அப்துல்அஸீஸ் பின் அப்துல்ரஹ்மான் அல் சவுத், 1877ஆம் ஆண்டு ரியாத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே வாசிப்பு, எழுத்து மற்றும் புனித குர்ஆனை மனனம் செய்தல் உள்ளிட்ட ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
ரியாத்தில் இருந்து குடும்பத்துடன் வெளியேறிய பின்னரும், நகரை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்ட மன்னர் அப்துல்அஸீஸ், 1902ஆம் ஆண்டு ரியாத்தை மீண்டும் கைப்பற்றினார். அல் மஸ்மக் அரண்மனையை கைப்பற்றியதன் மூலம் சவுதி அரேபியாவை ஒன்றிணைக்கும் செயல்முறைக்கு அவர் அடித்தளமிட்டார்.
இந்த ஒன்றிணைப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச ஆணையின் மூலம் ‘சவுதி அரேபிய இராச்சியம்’ என்ற பெயரில் நாடு ஒன்றிணைக்கப்பட்டது. இந்த ஆணை செப்டம்பர் 23ஆம் திகதி 1932 முதல் நடைமுறைக்கு வந்தது.
நவீன அரசுக்கான அடித்தளம்
மன்னர் அப்துல்அஸீஸின் ஆட்சிக் காலத்தில் நீதித்துறை மறுசீரமைக்கப்பட்டதுடன், பல்வேறு அமைச்சுக்கள் நிறுவப்பட்டன. வெளிவிவகார அமைச்சு 1930ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1953ஆம் ஆண்டு அமைச்சரவை அமைக்கப்பட்டது.
கல்வித்துறையிலும் முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 1926ஆம் ஆண்டு பொதுக் கல்வி இயக்குநரகம் நிறுவப்பட்டதுடன், அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி கற்க அனுப்பப்பட்டனர்.
சுகாதாரத்துறைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டதுடன், பொது சுகாதார இயக்குநரகம் நிறுவப்பட்டது. இது பின்னர் 1951ஆம் ஆண்டு சுகாதார அமைச்சாக மாற்றப்பட்டது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் விரிவுபடுத்தப்பட்டதுடன், புனிதத் தலங்களுக்கு வரும் யாத்திரிகர்களுக்கான மருத்துவ வசதிகளும் மேம்படுத்தப்பட்டன.
எண்ணெய் வளமும் உட்கட்டமைப்பு வளர்ச்சியும்
1933ஆம் ஆண்டு Standard Oil of California நிறுவனத்துடன் எண்ணெய் ஆய்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1938ஆம் ஆண்டு தம்மாம் எண்ணெய் கிணறு இலக்கம் 7இல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. 1939ஆம் ஆண்டு சவுதியின் முதல் எண்ணெய் ஏற்றுமதி இடம்பெற்றது.
விவசாயம் மற்றும் நீர்வளத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டதுடன், வீதிகள் அமைத்தல், ரியாத்–தம்மாம் ரயில் பாதை மற்றும் போக்குவரத்து, தொடர்பாடல் கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டு புனிதத் தலங்களுக்கு முக்கியத்துவம்
மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனிதத் தலங்களுக்கும் மன்னர் அப்துல்அஸீஸ் சிறப்பு கவனம் செலுத்தினார்.
பெரிய பள்ளிவாசல் (மஸ்ஜிதுல் ஹராம்) மறுசீரமைக்கப்பட்டதுடன், 1927ஆம் ஆண்டு கிஸ்வா தொழிற்சாலை நிறுவப்பட்டது. பெரிய பள்ளிவாசலுக்கு மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டது. மதீனாவில் உள்ள நபி பள்ளிவாசலும் அதன் வசதிகளும் மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டன.
சவுதி தேசிய தினம், நாட்டின் ஒற்றுமை, தேசிய பெருமை மற்றும் மக்களின் பங்களிப்பை நினைவுகூரும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேவேளை, எதிர்காலத்தை நோக்கிய சவுதி அரேபியாவின் வளர்ச்சிப் பயணத்தையும் இந்த நாள் பிரதிபலிக்கிறது.
(மூலம்: King Abdulaziz Foundation / Al Agel News)








