(எம்.எஸ்.எம். ஸாகிர்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 43 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களிடையே நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத் தெரிவில், அல்-மனார் மத்திய கல்லூரியின் தரம் 11 மாணவியான அலிஷ்பா ஜெஸ்மி மூஸா, கல்முனை வலய மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பேச்சாற்றல், மும்மொழிகளிலும் கருத்துக்களைத் தெளிவாகவும் ஆற்றலுடனும் முன்வைக்கும் திறன், தலைமைத்துவ ஆற்றல், வெளிப்பாட்டுத் திறன் மற்றும் மேடை அனுபவம் உள்ளிட்ட பல்வேறு திறன்களின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அவர் இப்பொறுப்புக்குத் தெரிவாகியுள்ளார்.
அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்று வரும் அலிஷ்பா ஜெஸ்மி மூஸா, கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் பேச்சு, தனிநடிப்பு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட கலை, இலக்கிய மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு பல்வேறு வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பாடசாலையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் தலைப்புகளுக்கு ஏற்ப தனது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வரும் இவர், மேடை ஆளுமையையும் கருத்துக்களைத் துணிச்சலுடன் முன்வைக்கும் ஆற்றலையும் தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, 2023ஆம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற மாதிரி மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கி, அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அல்-மனார் மத்திய கல்லூரியின் மாணவத் தலைவராகவும் (School Prefect) பொறுப்பு வகிக்கும் இவர், பாடசாலையின் தலைமைத்துவ மற்றும் மாணவர் பிரதிநிதித்துவச் செயற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
இவ்வாறான தொடர்ச்சியான தலைமைத்துவ அனுபவங்களும், பேச்சாற்றல் மற்றும் பன்முகத் திறன்களும் அவரது ஆளுமை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, வலய மட்ட மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமராக உயர்ந்திருப்பது அவரது திறமைக்கும் தொடர் முயற்சிக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
கல்முனை கல்வி வலயத்தின் அல்-மனார் மத்திய கல்லூரி அதிபர் ஐ. உபைதுல்லாவின் வழிகாட்டல், ஊக்கம் மற்றும் மாணவியின் திறமைகளை வளர்ப்பதில் அவர் கொண்டிருந்த அக்கறை ஆகியவற்றுடன், பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இந்த அடைவில் முக்கிய பங்காற்றியுள்ளன.
மாணவியின் ஆற்றல்களை அடையாளம் கண்டு, அவற்றைச் செம்மைப்படுத்தி, பல்வேறு வாய்ப்புகளை வழங்கிய பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்பும் பாராட்டத்தக்கதாகும்.
அலிஷ்பா ஜெஸ்மி மூஸா, கல்முனை கல்வி வலயத்தின் தமிழ்ப் பாட ஆசிரிய வளவாளராகப் பணியாற்றும் ஜெஸ்மி மூஸா மற்றும் கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் பாத்திமா சுமைய்யா ஆகியோரின் மூத்த மகளாவார்.
மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமர் என்ற புதிய பொறுப்பின் ஊடாக, சக மாணவர்களின் குரலாக ஒலித்து, அவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் பொறுப்புணர்வுடன் முன்வைத்து, சிறந்த தலைமைத்துவப் பண்புகளுடன் தனது எதிர்காலப் பயணத்தைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது இந்த அடைவு அல்-மனார் மத்திய கல்லூரிக்கும், பெற்றோருக்கும், கல்முனைக் கல்விச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








