இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு தொடர்பான பயிற்சியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் இப்பயிற்சியிலிருந்து விடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இதற்காக தேசிய கல்வியியல் நிறுவனம் மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் பங்களிப்பும் பெறப்படுகின்றது.
தேசிய பயிற்சி முறையின் கீழ் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், தேசிய மட்டத்தில் 108 முதன்மைப் பயிற்சியாளர்களையும், மாகாண மட்டத்தில் 556 பயிற்சியாளர்களையும் தயார்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு முன்பள்ளி ஆசிரியருக்கும் 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தற்போது எட்டு மாகாணங்களில் பயிற்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்திற்கான பயிற்சித் திட்டம் நவம்பர் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறப்புத் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வித் தேவைகள் தொடர்பிலும் இத்திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துதல், முறைசார்ந்த பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துதல் ஆகியன இத்தேசிய திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன மேலும் தெரிவித்துள்ளார்.








