இலங்கையும் பலஸ்தீனமும் தங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இராஜதந்திரம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதாபிமான துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளன.
இலங்கையின் ரமல்லா பிரதிநிதி அலுவலகத்தின் தகவலின்படி, பலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி பாரூக் மொஹமட் பவ்ஸர், ரமல்லா மற்றும் அல்-பீரா ஆளுநர் டொக்டர் லைலா கன்னமை திங்கட்கிழமை (07) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது, பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான இலங்கையின் ஐந்து தசாப்தகால அர்ப்பணிப்பை பாரூக் மொஹமட் பவ்ஸர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், அமைதியான தீர்வை ஏற்படுத்துவதற்குமான பல்தரப்பு முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ரமல்லாவில் இலங்கை தொழிற்பயிற்சி நிறுவனத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதில் இலங்கை ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐ.நா. நிவாரண மற்றும் பணிகள் முகமைக்கு (UNRWA) தொடர்ந்தும் ஆதரவளிப்பதுடன், குறிப்பாக காசா பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் வகையில், Sri Lanka Expo 2027 தொடர்பிலும் அவர் ஆளுநருக்கு விளக்கமளித்துள்ளார். PalTrade மற்றும் பலஸ்தீன வர்த்தக சம்மேளனங்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி, வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகள், சுற்றுலா மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தொடர்ச்சியான அரசியல் மற்றும் மனிதாபிமான ஆதரவுக்கு ஆளுநர் லைலா கன்னம் நன்றி தெரிவித்ததுடன், மறைந்த ஜனாதிபதி யாசர் அரபாத் காலத்தில் இரு தரப்புக்கும் இடையில் உருவாக்கப்பட்ட வரலாற்று உறவையும் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் வர்த்தகம், தொழிற்பயிற்சி, கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை – பலஸ்தீன இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.









