இலங்கையும் இந்தோனேசியாவும் இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.
கொழும்பில் செப்டெம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைச் சந்திப்பில், மருந்துப் பொருட்கள், கனிம வளங்கள் மற்றும் ஆடைத்துறை உள்ளிட்ட துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு, நாடுகளுக்கிடையிலான எல்லைகளைத் தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் மற்றும் விவசாய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக உர விநியோகம் மற்றும் மீன்பிடித்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இருதரப்பும் கவனம் செலுத்தின.
சுற்றுலா மற்றும் இருநாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் விசா நடைமுறைகளை எளிதாக்குவது தொடர்பிலும், கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ஆசியான் (ASEAN) துறைசார் பேச்சுவார்த்தை பங்காளித்துவ (SDP) அந்தஸ்தைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிக்கும், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) உடன்படிக்கையில் இணைவதற்கான முயற்சிக்கும் இந்தோனேசியாவின் ஆதரவை இலங்கை மீண்டும் கோரியுள்ளது.
இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுக்கிடையில் வழக்கமான அரசியல் கலந்துரையாடல்களுக்கான முறையான கட்டமைப்பை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து முதலாவது அரசியல் ஆலோசனைச் சுற்று ஆரம்பமானது.
இலங்கைத் தரப்புக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா தலைமை தாங்கியதுடன், இந்தோனேசியத் தரப்புக்கு ஆசிய-பசிபிக் மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கலாநிதி சாந்தோ தர்மசுமார்டோ தலைமை தாங்கினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவை நினைவுகூர்ந்த இரு தரப்பினரும், அணிசேரா இயக்கம் உள்ளிட்ட சர்வதேச முயற்சிகளை முன்னெடுப்பதில் இலங்கையும் இந்தோனேசியாவும் ஆற்றிய ஆரம்பகால பங்களிப்புகளை சுட்டிக்காட்டினர்.
மேலும், இலங்கை – இந்தோனேசியா இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை 2027ஆம் ஆண்டு கொண்டாடும் வகையில், ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்த இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இரண்டாவது அரசியல் ஆலோசனைச் சுற்று 2028ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது.










