மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்கும் வகையில், முக்கிய கொள்கை மாற்றங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள விசேட நாடாளுமன்றக் குழுவொன்று முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட இந்த விசேட குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுகளைக் கொண்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்துதல், மாவட்ட மட்டத்தில் மருத்துவப் பரிசோதனைகளை நடத்துதல் மற்றும் தனிநபர்களின் உடல் தேவைகளுக்கு ஏற்ப வாகனங்களை மாற்றியமைப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) நடைமுறைகளை மாற்றியமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்களில் திருத்தங்களை மேற்கொள்ளுதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
முன்மொழியப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பரந்தளவிலான வாகன வகைகளுக்கான அனுமதியை வழங்கும் வகையில் பார்வைப் புல மதிப்பீட்டின் அடிப்படையில் மருத்துவத் தகுதி அளவுகோல்களை நிர்ணயித்தல் அடங்குகிறது.
மேலும், சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை இணைத்தல், செவித்திறன் குறைபாடுள்ள சாரதிகளுக்கான விசேட அடையாளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் ஒரே சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருப்பவர் பல மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்ய அனுமதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.
நிர்வாக ரீதியான தடைகளை நீக்கும் வகையில், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்துக்கும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கும் இடையிலான டிஜிட்டல் இணைப்பு முறைமையை மேம்படுத்தவும் குழு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், மருத்துவப் பரிசோதனை நடைமுறைகளை எளிமைப்படுத்துவதோடு, மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நிறுவன மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதேவேளை கடுமையான வீதி பாதுகாப்பு தரநிலைகளைப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழு சுட்டிக்காட்டியுள்ளது.








