Apple நிறுவனத்தின் உள்நிலை மென்பொருள் புதுப்பிப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக iCloud மற்றும் Apple Pay உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை வழமைக்குக் கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளது.
இந்தப் பாதிப்பு சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை எனத் தெரிவித்த Apple நிறுவனம், பாதிக்கப்பட்ட பல சேவைகள் தற்போது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எஞ்சியுள்ள சேவைகளையும் விரைவில் மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சேவைத் தடைகளைப் பல்வேறு தரவுகள் மூலம் கண்காணிக்கும் Downdetector தளத்தின் தகவலின்படி, அமெரிக்க நேரப்படி நண்பகல் 12.20 மணியளவில் Apple Pay சேவையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக சுமார் 2,300 பயனர்கள் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
அதேவேளை, இந்தச் சேவைத் தடையின் உச்சக்கட்டத்தில் iCloud சேவையில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக சுமார் 1,800 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
எனினும், Downdetector தளத்தின் புள்ளிவிபரங்கள் பயனர்களால் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், உண்மையில் பாதிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை மாறுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அண்மைய நாட்களில் தொழில்நுட்பச் சேவைகளில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தடைகளுக்கு மத்தியில் Apple நிறுவனத்தின் இந்தச் சேவைப் பாதிப்பும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் Microsoft நிறுவனத்தின் உலகளாவிய சேவைத் தடை, அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாகப் பாதித்த FAA வலையமைப்புக் கோளாறு, United Airlines நிறுவனத்தின் தொழில்நுட்பச் செயலிழப்பு மற்றும் JPMorgan Chase வங்கியின் மென்பொருள் கோளாறு காரணமாக சில வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
எனினும், இந்தச் சம்பவங்கள் சைபர் தாக்குதல்களுடன் தொடர்புடையவை அல்ல என சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
(CNA / Reuters)








