ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத குடியேற்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் தொடர்பில் மூன்று இஸ்ரேலிய தனிநபர்கள் மற்றும் நான்கு அமைப்புகள் மீது அவுஸ்திரேலியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
புதிய குடியேற்றங்களைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறித்த தனிநபர்களும் அமைப்புகளும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய குடியேற்றங்களுக்கான நிதி திரட்டுதல், தன்னார்வலர்களை இணைத்தல் மற்றும் வன்முறையில் ஈடுபடும் குடியேறிகளுக்கு ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடைகளின்படி, அவுஸ்திரேலியப் பிரஜைகள் மற்றும் அவுஸ்திரேலிய நிறுவனங்கள் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீனப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கும் வகையில் அமைந்துள்ள E1 குடியேற்றத் திட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், இரு நாடுகள் தீர்வுக்கான சாத்தியத்தைப் பாதிப்பதாகவும் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்டவிரோத குடியேற்றங்களைக் கட்டியெழுப்பும் எட்டு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளைத் தடுத்து வரும் குடியேறிகள் குழு மீது பிரித்தானியா செவ்வாய்க்கிழமை (17) தடைகளை அறிவித்திருந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், சட்டவிரோத குடியேற்றக் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் இஸ்ரேலிய நிறுவனங்களைப் பாதுகாப்பதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் உறுதியளித்துள்ளார்.







