அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யச் சதி செய்த பாகிஸ்தானியர் ஒருவருக்கு 27 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
48 வயதான ஆசிப் மெர்ச்சன்ட் என்பவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை செவ்வாய்க்கிழமை (17) அறிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றமை மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலை செய்யச் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
2024 ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட ஆசிப் மெர்ச்சன்ட், அமெரிக்காவில் அரசியல்வாதி ஒருவரையோ அல்லது அரச அதிகாரி ஒருவரையோ படுகொலை செய்வதற்காகக் கூலிப்படையினரை அமர்த்த முயன்றதாக புரூக்ளினில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும், தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தினரை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையிடமிருந்து பாதுகாப்பதற்காகவே இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், குறிப்பிட்ட ஒருவரைக் கொலை செய்யுமாறு தனக்கு ஒருபோதும் உத்தரவிடப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
கடந்த 2020 ஜனவரி மாதம் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







