BBC, HSBC UAE வங்கி, Air France மற்றும் IKEA உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 178 இணையத்தளங்கள் நிதித் தகவல்களைத் திருடும் நோக்கிலான சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதான நிறுவனங்கள் தங்களது பயனர்களின் இணைய அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் ‘Optimizely’ என்ற டிஜிட்டல் தளத்தில் ஹெக்கர்கள் ஊடுருவி, தீங்கிழைக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட JavaScript குறியீடுகளைச் சேர்த்துள்ளதாக ‘Cybernews’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 178 இணையத்தளங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
பயனர்களின் கடன் அட்டை இலக்கங்கள், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட நிதித் தகவல்களைத் திருடுவதுடன், Apple சாதனங்களில் தீங்கிழைக்கும் குறியீடுகளைப் பதிவேற்றி அவற்றின் பாதுகாப்பைச் சீர்குலைப்பதையும் ஹெக்கர்கள் நோக்கமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சைபர் தாக்குதலை முதன்முதலில் கண்டறிந்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்கொட் ஹெல்மே (Scott Helme), தனது வலைப்பதிவில் உலகின் அதிகம் பார்வையிடப்படும் இணையத்தளங்கள் பலவும் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், Zoom, BBC, CNN, Salesforce, GitLab, IKEA, HSBC UAE, Equifax, Air France-KLM, Ledger மற்றும் Peacock உள்ளிட்ட நிறுவனங்களின் இணையத்தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதல் நடத்தியவர்களின் கிரிப்டோகரன்சி பணப்பைகளுக்கு நவம்பர் 16ஆம் திகதி சுமார் ஒன்பது மணி நேரத்திற்குள் 7,040 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட இணையத்தளங்களில் இருந்து பெரும்பாலான தீங்கிழைக்கும் குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட் ஹெல்மே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ‘Optimizely’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது ‘Optimizely Web Experimentation’ சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைப் பாதித்த பாதுகாப்புச் சம்பவத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்ட சேவைப் பாதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஊடுருவப்பட்ட குறியீடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.








