தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ (Akvan) சூறாவளி மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 12.6° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.6° இற்கு அருகில், திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 650 கிலோமீற்றர் தொலைவில் இந்தச் சூறாவளி மையம் கொண்டிருந்தது.
இந்தத் தொகுதியானது மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவான சூறாவளியாகத் தீவிரமடைய அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, நாளை (19) பிற்பகல் 5.30 மணியளவில் கடுமையான புயலாக வலுப்பெறுவதுடன், நாளை மறுதினம் (20) ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரை ஊடாக இந்தியாவுக்குள் நுழையக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால், வட அகலாங்கு 06 முதல் 19 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடற்பகுதிகளிலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலைமை
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய கடற்பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்.
காற்றின் நிலைமை
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.
ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலைமை
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பகுதிகள் இடைக்கிடையே சற்று கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் வானிலை
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.








