இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் பல்வேறு சர்வதேச கல்விசார் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் நிலையை மேம்படுத்துவதுடன், கல்வித்துறையின் சர்வதேசமயமாக்கலை ஊக்குவிப்பதும் இந்தக் கூட்டாண்மைகளின் பிரதான நோக்கமாகும்.
இதன்படி, கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவின் மணிப்பால் அகடமிக்கும் இடையிலான ஒத்துழைப்பு, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திற்கும் தாய்லாந்தின் மஹாமகுட் பௌத்த பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கும் சீனா மற்றும் ஸ்பெயினில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
மேலும், கூட்டு முதுகலை ஆய்வுப் பயிற்சிகளை முன்னெடுப்பதற்காக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான குடை ஒத்துழைப்பு இணை மேற்பார்வை ஒப்பந்தத்திற்கும் (Umbrella Cotutelle Agreement) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.







