2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இடம்பெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில், உஸ்மான் கவாஜா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித்தலைவர் பாட் கம்மின்ஸ் கடுமையாக நிராகரித்துள்ள நிலையில், முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் அவருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் இன்று (13) நடைபெற்ற சுமார் 70 நிமிட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கம்மின்ஸ், 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது மணர்த்தாளைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுக்கும் தெரிந்திருந்ததாக கவாஜா தெரிவித்த கருத்தை, “முற்றிலும் அடிப்படையற்றதும் தவறானதுமாகும்” எனக் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாகப் பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து தனக்கு எவ்வித முன் அறிவும் இருக்கவில்லை எனத் தெரிவித்த அவர், அந்தத் திட்டத்தை வகுப்பதில் தானோ அல்லது ஏனைய வீரர்களோ பங்களித்ததாகக் கூறப்படுவதையும் நிராகரித்தார்.
மேலும், மணர்த்தாள் மைதானத்துக்குக் கொண்டுவரப்படுவது குறித்து அனைத்து வீரர்களும் அறிந்திருந்ததாகக் கவாஜா தெரிவித்த கருத்து 100 சதவீதம் தவறானது என்றும் கம்மின்ஸ் குறிப்பிட்டார்.
கவாஜாவின் ‘Sabr’ என்ற சுயசரிதை நூலில் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பலரது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (13) இங்கிலாந்துக்கு எதிரான அவுஸ்திரேலிய அணியின் முதலாவது ஒருநாள் போட்டி குறித்த Fox Cricket ஒளிபரப்பின்போது கருத்துத் தெரிவித்த டேவிட் வோர்னர், கவாஜாவின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
“உஸ்ஸி தனது புத்தகத்தில் எழுதியுள்ள விடயங்கள் உண்மை என்பதால் நான் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கிறேன். தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து உண்மையிலேயே வருந்துகிறேன். இன்று அணித்தலைவர் கவாஜாவைத் தவறான நிலைக்குத் தள்ளிவிட்டதாகவே நான் உணர்கிறேன். இது குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்” என வோர்னர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணை முறையாகக் கையாளப்படவில்லை என்றும், அதன் விளைவுகள் இன்னமும் சம்பந்தப்பட்டவர்களைப் பாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தைத் தொடர்ந்து 12 மாத போட்டித் தடையை எதிர்கொண்ட வோர்னர், கவாஜாவின் கருத்துகளுக்கு ஏற்கனவே பலமுறை ஆதரவு தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் இடம்பெற்ற இந்தச் சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 12 மாத போட்டித் தடையும், கமரூன் பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாத போட்டித் தடையும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கவாஜாவின் சுயசரிதை நூல் மீண்டும் இந்த விவகாரத்தைப் பேசுபொருளாக்கியுள்ளதுடன், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களிடையே முரண்பட்ட கருத்துகள் நீடிப்பதை இந்தச் சமீபத்திய சர்ச்சை வெளிப்படுத்தியுள்ளது.








