அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் ஏ9 வீதியில் இன்று (10) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
காலை சுமார் 10.30 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் ஒன்றின் பின்னால் பயணித்த தனியார் பேருந்து, அந்தப் பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் நியூஸ்வயருக்குத் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தகவலின்படி, விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த 18 முதல் 20 பேர் வரை அநுராதபுரம், வவுனியா மற்றும் மெதவச்சிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஏனைய விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(Newswire)








