‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்’ (PSTA) சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கிடைத்துள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு சவால் விடுத்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஆரம்பமானது.
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் குறித்த குழாமில் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
விசாரணைகளின் நிறைவில், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வியாக்கியானம் தற்போது சபாநாயகரை வந்தடைந்துள்ளது.








