வண்ணாத்திவில்லு, லக்டோவத்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சேமித்து வைத்திருந்தமை தொடர்பான வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான ‘கபூர் மாமா’ என அழைக்கப்படும் மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.
தனக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, மேல்நீதிமன்ற நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அனைத்துத் தண்டனைகளையும் ஒரே காலப்பகுதியில் அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அவருக்கு மொத்தமாக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை விளக்கமறியலிலும் தடுப்புக் காவலிலும் கழித்த ஏழரை ஆண்டுகளைத் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைய, அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகளை நீடிக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டமை, அவரது வயது மற்றும் ஏனைய விசேட சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
6ஆவது பிரதிவாதிக்கு நாளை மீண்டும் விசாரணை
இதேவேளை, இந்த வழக்கின் ஆறாவது பிரதிவாதியான ‘சஜித் மௌலவி’ என அழைக்கப்படும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சஜித், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு மேலதிக அவகாசம் கோரியுள்ளார்.
இதனையடுத்து, அவரது நிலைப்பாட்டை அறிவதற்காக வழக்கை நாளை (29) காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், அவரைக் காலை 7.45 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ‘கபூர் மாமா’வுக்கு எதிராக கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளுக்காக அவர் அழைத்துச் செல்லப்படும்போது விசேட பாதுகாப்பு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபரால் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்களில் ஐந்து பிரதிவாதிகள் ஏற்கனவே குற்றங்களை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








