நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அதி அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த மாதம் 3ஆம் திகதி முதல் இதுவரை 25 மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக ஏற்பட்ட ‘டித்வா’ புயலின் தாக்கம் காரணமாகப் பல பகுதிகளில் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சில பகுதிகளில் உள்ள பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் தற்போதைய மழையுடன் சரிந்து அடித்துச் செல்லப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்தார்.
குறிப்பிட்ட சில பகுதிகளில் குறைந்தளவு மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தாலும், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் அளவைக் கருத்தில் கொண்டு மண்சரிவு எச்சரிக்கைகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், தமது பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை
இதற்கிடையில், நேற்று (21) பெய்த மழையைத் தொடர்ந்து மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம்: உடபலாத்த, மெததும்பர, குண்டசாலை.
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட்.
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எலபாத, குருவிட்ட.
தற்போது பெய்து வரும் மழையின் அளவைப் பொறுத்து இந்த எச்சரிக்கை அறிவித்தல்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் கலாநிதி வசந்த சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.








