தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 16,500 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெதுரு ஓயா நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் அதிக மழை காரணமாக, மேலதிகமாக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திறக்கப்பட்ட வான் கதவுகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.
இதனால் தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்தை அண்மித்துள்ளதுடன், ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாரியபொல, நிக்கவரெட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நீர்த்தேக்கத்துக்கு உட்பாயும் நீரின் அளவைப் பொறுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, நீர்த்தேக்கத்துக்குக் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறப்பு
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 7,884 கன அடி நீர் கலை ஓயாவுக்கு வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







