கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் ரூ.10 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
42ஆவது தேசிய மீலாதுன் நபி அரச விழாவுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், மத நிறுவனங்களை வலுப்படுத்துவதும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இதேவேளை, தேசிய மீலாதுன் நபி விழாவின் ஒரு பகுதியாக “எங்கள் பள்ளிவாசலுக்கு வரவேற்கிறோம்” என்ற நல்லிணக்க நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று, அவற்றின் கலாசாரம், வரலாறு மற்றும் சமய நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்பும் வகையில், பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்தி, நல்லிணக்கத்திற்கான பாலங்களை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முயற்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.









