இலங்கையின் 8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கையில், பாராளுமன்றத்தின் உயர் பதவிகளில் இருப்போரின் எரிபொருள் பயன்பாடு மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பில் பல முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, சபாநாயகரின் எரிபொருள் பயன்பாட்டிற்கு எவ்வித வரம்பும் நிர்ணயிக்கப்படாததால், அளவுக்கு அதிகமாக எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
9ஆவது பாராளுமன்றத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளான 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில், சபாநாயகர் சராசரியாக மாதத்திற்கு முறையே 3,994 லீற்றர் மற்றும் 6,122 லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார்.
இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 66 சதவீதம் மற்றும் 155 சதவீத அதிகரிப்பாகும்.
இதற்காக 2023ஆம் ஆண்டில் ரூ.19,373,866 மற்றும் 2024ஆம் ஆண்டில் ரூ.26,045,103 செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு அமைச்சரவை அல்லாத அமைச்சருக்கு இணையான சலுகைகள் மற்றும் படிகளை வழங்குவதற்கு 2018 நவம்பர் 5ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும், அவருக்கான எரிபொருள் வரம்பு முறையாகக் கடைப்பிடிக்கப்படாமல், கட்டுப்பாடின்றி எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரதி அமைச்சருக்கு மூன்று உத்தியோகபூர்வ வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 2023–2024 காலப்பகுதியில் பிரதி சபாநாயகர் தனது மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மேலதிகமாக தனிப்பட்ட சொகுசு காரொன்றிற்கும் எரிபொருள் பெற்றுள்ளார்.
அதன்படி, அந்த சொகுசு காருக்காக 21,299 லீற்றர் எரிபொருள் பெறப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி ரூ.8,545,037 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ வாகனங்களுக்காகவும் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி 2023ஆம் ஆண்டில் 6,980 லீற்றரும், 2024ஆம் ஆண்டில் 1,515 லீற்றரும் மேலதிகமாக எரிபொருள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதி சபாநாயகர் பதவிக்குக் கீழ்நிலையாகக் கருதப்படும் ‘குழுக்களின் தலைவர்’ பதவிக்கு மூன்று உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தப் பதவிக்கான எரிபொருள் அளவு மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை முறையாக நிர்ணயிக்கப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஒரே நேரத்தில் இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2022 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் ரூ.6,071,690 பெறுமதியான 15,063 லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார். இது ஆண்டுக்கு சராசரியாக 5,031 லீற்றராகும்.
அத்துடன், இது அரச சேவையில் அதிகளவு எரிபொருள் படியைப் பெறும் அமைச்சின் செயலாளரை விட 2,300 லீற்றர் அதிகமானதாகும்.
மேலும், பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் உதவி செயலாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஏனைய அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படாத சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உத்தியோகபூர்வப் பயணங்களுக்கு எல்லையற்ற எரிபொருளுடன், தனிப்பட்ட பயணங்களுக்காக மாதத்திற்கு 1,200 கிலோமீற்றர் வரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய திணைக்களத் தலைவர்களுக்கு 960 கிலோமீற்றர் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும், 2022 ஜூன் மாதம் வரை தனிப்பட்ட பயணங்களுக்கான அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறிய தூரத்திற்கு ஒரு கிலோமீற்றருக்கு ரூ.8 என்ற அடிப்படையில் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
சந்தை நிலவரத்துடன் பொருந்தாத இந்தக் கட்டண முறையினால் அரசாங்கத்திற்கு ரூ.2,712,995 இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 2022 ஜூலை மாதத்திற்குப் பின்னர், வரம்பை மீறிய தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டிற்கான கட்டணம் சந்தை விலைக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அரச வாகனங்களைப் பயன்படுத்துவது கணிசமாகக் குறைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.








