அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் (Megan Schutt), மருந்துகள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக இரண்டு போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்ட ஓய்வுக் காலத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக, 33 வயதான மேகன் ஷட்டிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
குறித்த விதிமீறலை அவர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியிலும், மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் தொடக்கப் போட்டியிலும் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ வழிகாட்டுதல்களின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியமையே இந்த விதிமீறலுக்குக் காரணம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் போட்டிகள் நடைபெறாத காலப்பகுதியில் இடம்பெற்றதுடன், செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்டுள்ள இரண்டு போட்டிகளுக்கான தடையானது சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
மேகன் ஷட்டிற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதுடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும் தரநிலைகள் மற்றும் பொறுப்புகளை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மேகன் ஷட் மன்னிப்புக் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








